படித்தது பி.எஸ்.சி இயற்பியல், சென்னை விவேகானந்தா கல்லூரியில். அடுத்து எம்.சி.ஏ பட்ட மேற்படிப்பு, அண்ணா பல்கலைக்கழகத்தில். பிறகு எம். எஸ். பட்ட மேற்படிப்பு ரென்ஸ்ஸெலியர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட், அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்திலுள்ள ட்ராய் கிராமத்தில்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஐந்து வருடங்கள் அனுபவம். சென்னை சோழங்கநல்லூர், செங்கல்பட்டு மஹிந்த்ரா சிட்டி, அமெரிக்காவில் ஃபிலடெல்ஃபியா, டாலஸ் நகரங்களில் குப்பை கொட்டியபின் பணிக்கு முழுக்கு போட்டிவிட்டு மறுபடி படிப்பு. தற்பொழுது ஃபாக்ட்செட் நிறுவனத்தில் தகவல் கட்டமைப்பு மேலாளன். 2011ல் ஒரு சுபயோக சுபதினத்தில் மயூராவுடன் திருமணம். தாயின் மொழி தெலுங்கு. தாய்மொழி தமிழ்.
கிட்டத்தட்ட பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது என்று சொல்லலாம். ஆனால் அதற்கு முன்பே குடும்பச் சூழலில் தமிழ் நிறைய இருந்தது. வீட்டில் புத்தகங்கள் படிப்பவர்கள் நிறைய. குறிப்பாகத் தமிழ்ப் புத்தகங்கள். இரண்டு அறிவுஜீவிகள்: அண்ணனும் (சிலந்தியார்), அத்தை பையனும். சின்ன வயதிலேயே அவர்கள் கவிதை, கையெழுத்துப் பத்திரிகை, கதை என்று கலக்க, பியர் ப்ரஷரில் பினாத்தலாக ஆரம்பித்ததுதான் என் தமிழ்.
நல்ல ஆசான்கள் வழிகாட்ட, ஆரோக்கியமாகவே என் தமிழ் வளர்ந்தது. பொறியியல் நுழைவுத்தேர்வில் ஊத்திக்கொண்டதால் பி.எஸ்.சி எடுக்க, அங்கும் தமிழ். அருமையான நண்பனின் வழிகாட்டுதலில் சிறந்த புத்தகங்கள், இதழ்கள் என்று என் விடுதியறையில் தமிழ்மணம்.
அண்ணா பல்கலையில் கவனம் சென்றதும் இலேசான வாசிப்புடன் நின்றுவிட்ட தமிழ், மீண்டும் தலையெடுத்தது ஒரு சந்தோஷமான விபத்து. தமிழ் வலைப்பூக்களில் ஆர்வம் கொண்ட அண்ணன் அறிமுகத்தில் விளையாட்டாக வலைப்பதியத் தொடங்கியது என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம். ‘சுவடுகள்‘, ‘இறகு‘, ‘இருக்கிறது*இல்லை’ என மூன்று வலைப்பதிவுகள் சிறிது காலம் உயிரோடிருந்தன. வலைப்பதிந்த காலத்தில் சம்பாதித்த நட்பும், அனுபவமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது.
எழுத்தாளர் மற்றும் கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் பா.ரா, கிழக்கு பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரி ஊக்குவிக்க, துறுதுறுவென எழுதி முடித்த புத்தகம் ‘அமெரிக்கா போகணுமா’. எனது எழுத்துலக அனுபவம் அமெரிக்கா புத்தக ராயல்டியோடு நின்றுவிடாமலிருக்க பாரா, பத்ரி, மற்றும் கிழக்கு எழுத்தாளர்கள் வள்ளியப்பன், முத்துக்குமார், முகில், ராம்கி மற்றும் பலர் (விவிதபாரதி லிஸ்டு மாதிரி) பிரம்ம பிரயத்தனம் செய்தும் உருப்படாமலே போய்க்கொண்டிருக்கும் ப்ராடிகல் சூடோ-எழுத்தாளன் நான் என்றும் சொல்லிக்கொள்ளலாம் (மானக்கேடு
)
தமிழில் அறிவியல் குறித்து நிறைய எழுத ஆர்வமும், நன்றாகவே செய்யமுடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. படைப்பிலக்கியம் குறித்து எனக்கிருக்கும் ஆர்வங்கள் என்னோடே இருப்பது தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்லது.
வெகு காலமாகவே சொந்தக்கடை போட்டு அங்கே எனது எழுத்துக்களைப் பதிவு செய்ய ஆர்வம் (கஷ்டகாலம்!). பல்வேறு விஷப்பரிட்சைகளுக்குப் பிறகு இந்தத் தளம் உயிர்பெற்றிருக்கிறது. இது இன்னும் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். ‘சுவடுகள்’ மற்றும் ‘இறகு’ பதிவுகள் மொத்தமும் இங்கே பார்க்கக் கிடைக்கும். வேறேதும் புதிய தொடர்கள் முயற்சி செய்தால் அவ்வப்போது அறிவிக்கிறேன்.
இதுவன்றி ஆங்கிலமும் இனி மெல்லச் சாகும் என்று முடிவு செய்திருப்பதால் ஆங்கிலக் கட்டுரைகளும் அவ்வப்போது காணக்கிடைக்கும். ஐந்து வருட மென்பொறியியல் அனுபவத்தை வைத்து எதாவது செய்யும் எண்ணமும் இருக்கிறது. அது என்ன என்று தெரிந்தபின் அதுகுறித்துப் பேசுகிறேன்.
