செம்மொழியான தமிழ் மொழியாம் – ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாது
‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ கேட்டேன். மூஞ்சிபுஸ்தகத்தில் மூலைக்கு மூலை லிங்க் கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்று தான் கேட்கத் தகைத்தது. நவீனத் தமிழ் அத்தாரிட்டியாகத் தன்னை ஆணித்தரமாக நிலைநிறுத்திக்கொள்ள கலைஞருக்கு இன்னொரு இடம் கிடைத்திருப்பதால் இது மாநாட்டிற்கான பாடல் மட்டுமல்லாது தமிழர்களின் ‘anthem’ ஆகவும் இருக்கவேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும். ஆண்டாண்டுகளாக நாம் பாடிவந்த கவித்துவம் (செய்யுள்-த்துவம்?) செறிந்த தமிழ்த்தாய் வாழ்த்து தறிகெட்டுப் போகட்டும். திருவனந்தபுரத்து சுந்தரம் பிள்ளை தானே…கிடக்கட்டும் கிடப்பிலே!
அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் அலையும் பாடல் வரிகள். தம்பிகளுக்குக் கடிதம் எழுதிச் சோர்ந்திருக்கும் வேளைகளிலெல்லாம் ஒவ்வொரு வரி எழுதி இருப்பார் போலும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… பிறந்த பின்னர்’ – இது ஒப்பனிங் வரி. தமிழ் இரண்டாம் தாளில் பொதுக்கட்டுரை எழுதுவது போல. எ.கொ.ச! ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தமிழ் வார்த்தை கேட்டுப் புல்லரித்துக் கிடக்கும் சமஸ்கிருதமும் பிரஞ்சும் படித்த நம் தமிழார்வக்கோளாறுகள் பாதி புரிந்தும் புரியாமலும் தலையில் தூக்கி வைத்து ஆடத்தக்க வரிகள் அமைத்திருக்கும் சாமர்த்தியம் சிறப்பு. நல்ல பேசிக் கவரேஜ் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்: வள்ளுவன், பூங்குன்றன், கம்பன், அவ்வை, தொல்காப்பியம், ஐம்பெருங்காப்பியங்கள் போட்டாயிற்று. நடுநடுவே சொந்தச்சரக்கு. பொருளைப் பொதுவாக்குவது வேறு. பொழுது போகவில்லை என்றால் எதையாவது பொதுவாக்குவதே வேலை. புதிய தலைமுறைக்கேற்ற தமிழ் வாழ்த்துப் பாடலாம். கொண்டுவாரும் அய்யா எமது மீசைக் கவியின் புத்தகத்தை. புதிய தலைமுறைக்கான வரிகளை அதில் காட்டுகிறேன். இரண்டரை மாதம் இதை வைத்து முட்டிக்கொண்டதற்குப் பதில் ரஹ்மான் நாலு பாரதி பாடல்களை ரீமிக்ஸ் செய்திருக்கலாம்.
ரஹ்மான் அவரது ‘தேசபத்தி புல்லரிப்பு’ டெம்ப்ளேட்டைக் கையில் எடுத்திருப்பதால் (கேட்க: தாய் மண்ணே வணக்கம், வெள்ளைப் பூக்கள், புத்தம்புது பூமி இன்னபிற) பாடல் சிறப்பாக வந்திருக்கிறது. எந்த பரிசோதனை முயற்சியிலும் இறங்காமல் பேசிக் டெம்ப்ளேட் பயன்படுத்தி இருப்பதால் மினிமம் காரண்டி உண்டு. ஒவ்வொரு வரி பாட ஒவ்வொரு பெரிய தலை. முக்கியமாக மிஸ்ஸிங் எஸ். பி. பி, சித்ரா போன்றவர்கள். ஒரு வரியெல்லாம் பாட முடியாது போவென்று சொல்லியிருப்பார்களோ? கவுதம் மேனனின் வீடியோ அவரது படங்களைப் போலவே. ஒரு சில இடங்களில் சிறப்பு. வேறு சில இடங்களில் சொறி கடுப்பு.
இனி பாடல். ரஹ்மானின் விசிறி நான். அதற்காக அவர் செய்யும் அனைத்தும் அற்புதம் என்றெல்லாம் உதார் விடுகிற ஆள் கிடையாது. இந்தப் பாடலில் சில இடங்களில் சோபித்திருக்கிறார். பல இடங்களில் சொதப்பி இருக்கிறார். பாடல் மறுமுறை கேட்கும்படி இருக்கிறது. இந்த வரிகளுக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பது ரஹ்மானின் கைவண்ணத்தால் மட்டுமே. அதைப் பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் இப்படி ஒரு விஷயம் செய்யும்போது சில பொறுப்புகள் இருக்கின்றன. மிக முக்கியமான ஒன்று: தமிழைப் பற்றிய ஒரு பெரிய விழாவில், (அந்த விழா தேவையா என்பது பற்றிய விவாதத்தில் நுழையவில்லை இங்கே) தமிழைப் பற்றிய ஒரு பாடல் செய்யும்போது குறைந்தபட்ச பொறுப்பு, தமிழைச் சரியாக உச்சரிப்பது. இந்தப் பாடலில் அதை செய்யத்தவறியவர்களை உதைக்கலாம். என்ன செய்வது? கும்பலின் தலையே அந்தத் தவறைச் செய்கிறதே? யாதும் ஊரே யாவரும் கேளீஈஈர் என்று ரஹ்மான் பாடும்போது கோபம் வருகிறது. சினிமாப்பாடல்களில் வைரமுத்துவின், வாலியின் வ(சொ)ரிகளுக்குப் பாடும்போது இம்மாதிரி தவறு செய்தால் கிடக்கிறது கழுதை என்று விட்டுவிடலாம். இங்கேயுமா? குறள் என்று சொல்லத் தெரியாத விஜய் யேசுதாஸ் இந்தப் பாடலில் பாடத் தேவை இல்லை என்றே கருதுகிறேன். அதேபோல ஸ்ருதி ஹாசன். இவரது அப்பாவைக் கேட்கச் சொல்லவேண்டும் இவர் பாடிய லட்சணத்தை. பிறகு அந்த ராப். சரியான தமிழ் உச்சரிப்புடன் ராப் செய்யமுடியும். செய்திருக்கிறார்கள் (நட்சத்திராவின் டாக்டர் பர்ன் ழ, ள தவிர மிச்ச எல்லாவற்றையும் ஸ்பஷ்டமாக உச்சரித்தே ராப் பாடுகிறார்). தமிழ் பற்றிய பாடலில் ‘கவியரசி அவ்வை நல்லாள்’ என்று உச்சரிக்கத் தெரியாத பெண்மணிகள் கண்டிப்பாகத் தேவையே இல்லை. என் பாட்டி இம்மாதிரி கொடுமைகளைக் கேட்கும்போது சொல்லும் வரி நினைவுக்கு வருகிறது: அவள் வாயில் தர்ப்பையைப் போட்டுக் கொளுத்த.
ப்ளஸ்: இசை, வீடியோ சில இடங்களில்
மைனஸ்: மற்ற எல்லாமே

6 Comments
Good review.. That is not Thamizh Semmozhi Maanaadu.. That is karunanidhu image boasting koottam..
Bunch of jokers..in the name of Tamil
Thalaivaaaaa…as usual pinnal – punch line was bang on – tharbai kaataiye pottu koluthalam, thappe illai
– vaazhga nee emmaan!
arpudham arpudham…. nalla alasal
Well said Shankar… I slightly have a different opinion on the song! It doesn’t feel me to hear again and again though! O’wise, all your points are indeed true…
I was suppose to write it in tamil but need to find out the tool.
யாதும் ஊரே யாவரும் கேளீஈஈஈர் என்றபொழுது பாடியவரின் கன்னத்தில் அறைந்தாலென்ன என்று தோன்றியது. பெரும்பாலன இளைஞர்கள் இந்தப் பாடலை தங்களின் orkut favorite videos-ல் வைத்திருப்பது வெறுப்பேற்றுகிறது. தோழர்களே: தமிழ் தழைக்க வழி செய்யாவிட்டாலும் போகட்டும். அது தானாகவே பிழைத்துக் கொள்ளும். தயவு செய்து, தமிழைத் திட்டமிடடுக் குழி தோண்டிப் புதைக்காதீர்.
In one single sentence: I would say:
It’s a highly irritating song! I don’t understand how much money has been spent on this occassion. Whose money is this? What’s the benefit to third man in the society? சாதாரண கோயமுத்தூர் வாசிக்கு இந்த மாநாட்டால் என்ன பயன்? தினமும் பல மணி நேரம் power cut ஆனதைத் தவிர? இந்த மாநாட்டைக் காரணம் காட்டி சில real-estate broker-கள் விலையேற்றிக் Commission சம்பாதித்ததைத் தவிர?? இந்த அத்தனை பணத்தையும் வைத்து கோவை நகரின் நீர், மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், கல்வி வசதி போன்ற நல்ல காரியத்திற்குப் பயன் படுத்தியிருக்லாம்….! தமிழரைச் சாகடிதது தமிழை வாழ வைத்துப் பயனில்லை!