கோவிந்தனைக் காணச் சென்ற கோவிந்தசாமி
பதினாறு வருடங்கள் கழித்து மீண்டும் திருப்பதி. அண்ணன், அண்ணியுடன் ஒரு நாள் விசிட். ஒன்பதாம் வகுப்பில் சேருமுன்னர் திருப்பதியில் மொட்டையடித்து நெடும்பாம்புக்கியூவில் நின்ற அனுபவம் இலேசாக நினைவிலிருக்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு நாள் ட்ரிப் நன்றாகவே இருக்கிறது. வோல்வோ பேருந்து, காலை டிபன், மதிய சாப்பாட்டிலிருந்து தரிசனம், பிரசாதம் வரை அனைத்தும் அரேஞ்ச் செய்துவிடுகிறார்கள். கூடவே ஒரு திருட்டுமுழி, உடைந்த ஆங்கில கெய்டு. மேல் திருப்பதியில் காட்டேஜ் என்று ஒன்றைக்காட்டி அங்கே ஒரே ஒரு டாய்லட்டைத் திறந்துவைத்து அடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வேடிக்கை பார்க்கிறார்கள். பிறகு செல்ஃபோன்களைப் பிடுங்கிக்கொண்டு செருப்புகளை அங்கேயே கழற்றச் சொல்லி மே மாதத் தணல் வெயிலில் நான்கு தெரு நடக்கச் சொல்கிறார்கள். வேங்கடவனின் தரிசன ஆர்வம் பலரை உந்தித்தள்ளுகிறது (சிலரை, கொதிக்கும் கால்). கெய்டு டூரில் வந்த மக்களெல்லாரும் இருக்கிறார்களா என்று எண்ணி எண்ணி மாய்கிறார். தானே உள்ளே வந்து கியூவில் எல்லாரையும் நிறுத்துவேன் என்று அடம்பிடிக்கிறார். தரிசன டிக்கெட் வாங்கி முன்னமே கையில் கொடுத்து, இத்தனை மணிக்குத் திரும்ப வேண்டும் மானிடப் பதர்களே என்று சொல்லிவிட்டால் சுலபமாக இருக்குமென்று தோன்றியது.
திருப்பதி பக்தர்களின் பக்தி ஃபார்மட் பிடிபடமாட்டேன் என்கிறது. சக மனிதர்களின் முகரையை இடித்துப் பெயர்த்து, மிதித்துத் துவைத்து, கைக்குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மீது விசேஷ கவனம் செலுத்தி ஏறி மிதித்து, கையில் அகப்பட்ட தலைமயிரை எல்லாம் பிடித்திழுத்துச் சண்டமாருதம் செய்துகொண்டே ஏடுகொண்டலவாடா, வேங்கடரமணா என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். திருமலையுறை திருமாலைக் காணும் அவாவினால் உந்தப்பட்டு நிதானம் இழக்கிறார்கள் என்றெல்லாம் இல்லை. அருகே நின்றிருந்த அன்பர்களின் தெலுங்கு சம்பாஷணையின் தமிழாக்கம்: “மாப்பு, அப்பிடியே கைய சைடுல வெச்சினு இடிச்சினே வா. வழி கரெட்டா கெடச்சிரும். பொம்பள, ஆம்பளன்னு பாக்காத”. பின்னால் நின்றிருந்த (என் முதுகை மிதித்துக் கொண்டிருந்த மகானுபாவன் என்றும் சொல்லலாம்) அன்பர் தன் மனைவியிடம் சொன்னது: “அந்தப் பையைத் தூக்கி முன்னால இருக்குறவன் தலை மேல வை. எவன் கண்டுக்கப்போறான்”. பேருந்தில் ஏறும்போது, கியூவில் முந்தும்போது எப்போதும் வந்துநிற்கும் அந்தக் காட்டுத்தனம் இறைவனை தரிசிக்கும்போதும் இயல்பாக வருகிறது. பக்தி, சிரத்தை எல்லாம் incidental போலிருக்கிறது.
எப்போதும் போல் மனத்தைக் கொள்ளை கொண்டவை வேங்கடவன் தரிசனம், திருப்பதிக்கும் திருமலைக்கும் இடையே பேருந்து செலுத்தும் ஓட்டுனர்களின் லாவகம், பிரசாத லட்டு மணம் (சைஸ் தேய்ந்துகொண்டே போவது போன்ற பிரமை
). பொதுவாக infrastructure நன்கு முன்னேறி இருக்கிறது. அங்கங்கே படிகளுக்கு பதில் ramp வைத்திருப்பது கொஞ்சம் பயமாக இருக்கிறது. சதாசர்வகாலமும் தண்ணீரில் ஊறி சறுக்கித் தள்ளுகிறது. நிறைய செக்யுரிட்டி செக்பாயிண்டுகள், எங்கு பார்த்தாலும் டைல்ஸ் பளபளா என்று கார்ப்பரேட் களை பின்னுகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் இலவச பொங்கல், புளியோதரை பிளாஸ்டிக் குவளைகளில், துடைத்துக்கொள்ள நாப்கினுடன் தருவார்கள் என்று நினைக்கிறேன்.
இன்று நேத்திர தரிசனமாம். அதாவது எம்பெருமான் கண்திறந்து நம்மைப் பார்க்கும் நாள். அடிதடி அதிரடிகளுக்கு மத்தியில், கண்திறந்த கோவிந்தனுடன் கொஞ்சமாகவேனும் உரையாட வேண்டியிருந்தது. சில கேள்விகளும் பிரார்த்தனைகளும். அனைத்தையும் கேட்டுப் புன்முறுவல் செய்தபடி அமைதியாக இருந்தான் நாராயணன் என்றுதானே இப்பதிவை முடிக்கவேண்டும்?

9 Comments
//எப்போதும் போல் மனத்தைக் கொள்ளை கொண்டவை வேங்கடவன் தரிசனம், திருப்பதிக்கும் திருமலைக்கும் இடையே பேருந்து செலுத்தும் ஓட்டுனர்களின் லாவகம், பிரசாத லட்டு மணம் (சைஸ் தேய்ந்துகொண்டே போவது போன்ற பிரமை )//
கூடவே ‘ஜருகண்டி… ஜருகண்டி’ என்று தோள்பட்டையை இழுத்து மாறி மாறி பந்தாடி வெளியில் தள்ளும் பட்டர்களும், தட்டோடு லட்டுகளை மாற்றி வைக்கும்போது எழுந்து அடங்கும் ஈக் கூட்டமும்…
)
ஸ்ரீ வேங்கட நிவாஸாயா ஸ்ரீநிவாஸாய மங்களம்-னு சொல்லி முடிச்சிருக்கலாமே
)
ஜருகண்டி ரொம்ப பிரபலம் சார். அதை எழுதினா கிரியேட்டிவிட்டி இல்லேன்னு சொல்லிடுவாங்க
மங்களம் சொல்லி முடிச்சிருக்கலாம். அட்லீஸ்ட் கோவிந்தனுக்கு ரொம்ப கோவம் வராம இருந்திருக்கும். வெங்கடேச புராணம்-னு ஒரு புஸ்தகம் இருந்தது எங்க வீட்ல. அருமையான நடையில முழுக்கதை. அழகான படங்கள். நெறைய உபகதைகள். கடைசில சுப்ரபாதம் அது இதுன்னு அமர்க்களமா இருக்கும். எங்க போச்சுன்னு தெரியல
பலே – நல்ல எழுத்து, பிரமாதமான கவரேஜ்
- என். சொக்கன்,
பெங்களூரு.
sari, naan solli mudichu vaikkaren.
DIM NAAN
(a)
mangal am
mokkachchaami
எலேய் தம்பி,
எழுத்தெல்லாம் ஆரம்பிச்சுடுச்சா வோய்… கீப் இட் அப்
Hey,
Brilliant work!