ஐபேடும் சில ஐயோபேடுகளும்


January 8, 2011 | 3 Comments | 681 views

சென்னையில் புத்தகக் கண்காட்சித் திருவிழா குறித்து ட்வீட்டித் தள்ளும் பாக்கியவான்கள் தலையிலெல்லாம் இடி விழட்டும் என்று எங்காவது எழுத உத்தேசித்திருந்தேன். இந்த இடம் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. அவர்களெல்லாம் தமிழ் நுங்கி தடித்துப் போய்க்கொண்டிருக்க, நமக்கு வாய்த்ததெல்லாம் நாலு சுவரும் நாசமாய்ப் போன ஃபேஸ்புக்கும் தான். ஆயினும், அதிலும் ஒரு சுவாரசியமிருக்கிறது. காரணம் அதில் கடந்த நான்கு நாட்களாக அல்லோலகல்லோலப்படும் எலெக்ட்ரானிக் செய்திகள்.

எலெக்ட்ரானிக் திருவிழா

வருடத்தின் முன்னூற்று அறுபது நாட்களில் லாஸ் வேகஸ் என்றால் பளபளா மாளிகைகளும், பர்ஸ் கிழிக்கும் ஜூதாட்டமும், பறக்கவைக்கும் குவார்ட்டரும், பலான பலான மேட்டரும் என்றிருந்தாலும் இந்த ஜனவரி மாதம் ஐந்து நாட்கள் மட்டும் அந்நகரம் வேறொரு வேடம் பூண்டு ஒரு மாபெரும் எலெக்ட்ரானிக் திருவிழாவுக்காக நாடெங்கிலுமிருந்து வந்து குவியும் எலெக்ட்ரானிக் ஆர்வக்கோளாறுகளை வரவேற்கிறது. Consumer Electronics Show(CES) எனப்படும் இக்கண்காட்சி டிஜிட்டல் ஜாம்பவான்கள் எல்லாரும் ஒன்றுகூடிக் கடைவிரித்து இந்த வருடத்து புதுச்சரக்குகளையெல்லாம் கொலு வைக்கும் ஒரு சைபர் சந்தை. ஒரே ஒரு பிரச்னை: நானோ நீங்களோ சும்மா நுழைவுச்சீட்டு வாங்கி உள்நுழைய முடியாது. மின்னணுத் துறைசார்ந்து பணிபுரிந்தால் மட்டுமே அனுமதி உண்டு. அதனால் நம்போன்றவர்கள் இதுபற்றி இணையத்தில்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

சிலேட்டின் சிறு கதை

இந்த வருட CES-ன் ஹைலைட் சிலெட்டுக் கணினி (டாப்ளட் பிசி). வாஸ்தவம்தான், இதொன்றும் புதிய சமாச்சாரம் இல்லை. சென்ற வருட CES-இலேயே அங்குமிங்கும் முளைத்த காளான் தான் இது என்றாலும், அப்போது வெறும் பஜனைத்தொழில்நுட்பமாகத்தான் (vaporware) இது இருந்தது. பிறகு ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கே உரிய கெத்துடன் ஐபேட் என்ற சிலேட்டுக்கணினியை அறிமுகப்படுத்தி வைக்க, அறுபத்துமூவரில் நீர்மோர் மாதிரி அள்ளிக்கொண்டு போயின பொதுஜனம். ஐபேடின் சிறந்த கட்டுமானம், வழுக்கிக்கொண்டு போகும் தொடுதிரை, ஆங்க்ரி பேர்ட்ஸ்விளையாடுவதிலிருந்து ஆணி புடுங்குவது வரை ஆயிரக்கணக்கில் மென்பொருட்கள், ஆப்பிள் ஆர்வக்கோளாறுகளின் அலப்பரை என்று பல விஷயங்கள் ஒன்றுசேர்ந்து ஐபேட் மில்லியன்கள் விற்றுத்தீர்த்து, சென்ற வருடத்தின் சூப்பர்ஹிட் சிலேட்டானது.

ஆனாலும் ஐபேட் தான் தலைசிறந்த டாப்ளட் என்று சொல்ல முடியாதபடி அதில் பிரச்னைகள் பல இருந்தன. டாப்ளட் கணினி ஒரு ரெண்டுங்கெட்டான். மடிக்கணினி அளவு பெரிதில்லை. கைப்பேசி அளவு சிறிதுமில்லை. எனவே விண்டோஸ், லினக்ஸ் போன்ற இயங்குதளங்களை டாப்ளட் வடிவத்தில், தொடுதிரை இடைமுகத்தில் இயக்குவது கடினம். iOS, ஆண்ட்ராய்ட் போன்ற கைப்பேசி இயங்குதளங்கள் தொடுதிரைக்குச் சரிதான். ஆனால் அவை அளவுக்கு மீறி எளிமையானவை. அவற்றை டாப்ளட்டில் அப்படியே இயக்குவதென்பது கணினியில் கால்குலேட்டர் பயன்படுத்துவது போலத்தான். செய்யலாம், தப்பில்லை. ஆனால் அவற்றில் டாப்ளட்டின் வடிவமும், சக்தியும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இருந்தாலும், ஆப்பிள் அதைத்தான் செய்தது. ஐபோனின் iOS இயங்குதளத்தை சற்றே தட்டிக்கொட்டி அப்படியே ஐபேடில் போட்டது. மேலும், ஐபேடில் கேமரா கிடையாது. பிற சாதனங்களுடன் இணைக்கத் தேவையான USB இணைப்பு கிடையாது. அங்கிங்கெனாதபடி இணையத்தில் எங்கும் வியாபித்திருக்கும் ஃபிளாஷ் வலைத்தளங்களையும், வீடியோக்களையும் ஐபேடில் பார்க்கமுடியாது. இப்படிப் பல இம்சைகள். பிரச்னைகள் இருந்தாலும் ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ ஷுகர்ஃப்ரீ’ என்கிற ரீதியில் ஐபேட் சக்கைபோடு போட்டது.

ஆப்பிள் ஐபேட் சாம்சங் காலக்ஸி டேப்
IPad-02

போட்டி இல்லாமலில்லை. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் திறமூல இயங்குதளத்தை உருவாக்கி ஊருக்கே உவந்தளித்துக்கொண்டிருந்ததால் போகிறவன் வருகிறவனெல்லாம் சைனாவில் ஒரு காண்ட்ராக்ட் போட்டு சோப்பு டப்பா கணக்காக டாப்ளட்டுகள் உருவாக்கி ஆண்ட்ராய்ட் செருகி ஆட்டையைப் போடும் வசதியிருந்தது. இந்த ஆட்டத்தில் சாம்சங் காலக்ஸி தான் முதல். ஐபேடின் பிரச்னைகள் பலவற்றை இது தீர்த்தாலும், அதன் ஏழு இன்ச் உருவம் (ஐபேட் பத்து இன்ச்), அதிக விலை, குறைந்த பேட்டரி, கைப்பேசி கால ஆண்ட்ராய்ட் என்று புது பிரச்னை லிஸ்டு கிளம்பியது. இது இல்லாமல் மழையில் முளைத்த காளான்கள் போல ஊர் பேர் தெரியாத நிறுவனங்கள் குறைத்த விலையில் ஏபேட், பிபேட், ஸீபேட் என்று உட்டாலக்கடி டாப்ளட்டுகளை விற்கத் தொடங்கின. இவற்றிற்கென ஒரு மலிவு விலை மார்க்கெட்டும் உருவாகியது. ஆனாலும் சென்ற வருடத்தின் டாப்ளட் நாயகன் யாரென்றால் ஐபேட் என்றே சொல்லவேண்டும்.

இந்நிலையில் டாப்ளெட் ஆர்வலர்கள் அனைவரும் இந்த வருடத்தில் எதிர்பார்க்கும் மாறுதல்கள் என்று கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:

1. டாப்ளட் வடிவத்தில் பயன்படுத்தக் கூடிய ஆண்ட்ராய்ட் இயங்குதளம்
2. நீடித்து வரும் பாட்டரி
3. மேலும் திறன்வாய்ந்த செயலி, மெமரி
4. USB, mini USB, HDMI, card slots போன்ற இணைப்புகளும் கேமராவும்
5. திறந்தவெளியிலும் வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரியும் திரை
6. ஃப்ளாஷ் மற்றும் பிற இணைய சமாச்சாரங்களுக்கு ஆதரவு
7. ஐபேடில் வாய்ப்பது போல எக்கச்சக்கமான மென்பொருட்கள்
8. குறைந்த விலையில் 3G, 4G, WiFi, Bluetooth என அனைத்தும்

புதிய சிலேட்டுகள்

இவ்வளவு பூர்வபீடிகையுடன், இனி இந்த வருட CES. எதிர்பார்ப்புகள் தெளிவாக இருந்ததாலோ என்னவோ இந்த வருடம் கொஞ்சம் பரவாயில்லை. 70-க்கும் மேற்பட்ட புதிய டாப்ளட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் முக்காலே மூணுவீசம் அதே பழைய ஆண்ட்ராய்ட் பஜனைதான் என்றாலும் சில டாப்ளட்டுகள் தேறும். கூகுள் சென்ற வருடத்திலிருந்தே டாப்ளட் வடிவில் இயங்கக்கூடிய ’Honeycomb’ என்ற புதிய ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை உருவாக்கத் தொடங்கி இருந்தது. இப்போது அதை மோட்டரோலா நிறுவனத்திற்கு மட்டும் கண்ணில் காட்டியிருக்கிறது. இதை வைத்து மோட்டரோலா ’ஸூம்’ என்ற புதிய டாப்ளட்டை CES-ல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. தேன்கூட்டைக் கையால் தொட்டுப்பார்க்கலாமோவென்றால் இல்லை; கொட்டுமென்கிறார்கள். இன்னும் பொத்திப் பொத்தி வைத்து, வெறும் டாப்ளட்டை மட்டும் தொட்டுப்பார்க்கச்சொல்லி டகால்டி செய்கின்றார்கள். ஆனால் மேற்சொன்ன அனைத்து விஷயங்களும் இருக்கும் என்று சத்தியம் செய்கின்றனர். விலை எவ்வளவென்றும் தெரியாத நிலையில் இன்னும் சற்று பஜனைத்தனமாகவே இருக்கிறது.

உலகப்புகழ் வாய்ந்த ப்ளாக்பெர்ரி கைப்பேசி தயாரிக்கும் RIM நிறுவனம், ப்ளேபுக் என்று ஒரு டாப்ளட் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதன் இயங்குதளம் சொந்தச்சரக்கு. QNX என்ற மென்பொருள் நிறுவனத்தை RIM வாங்கி, அவர்களது இயங்குதளத்தை இதில் போட்டிருக்கிறது. மோட்டரோலா மாதிரி இல்லாமல் இது இப்போதே வேலை செய்கிறது. ஐபேடை காட்டிலும் அதிவேகம் என்று பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள். இதிலும் இரண்டு இம்சை: இது ஏழு இன்ச் டாப்ளட். மேலும் இதில் ஈமெயில், காலண்டர் வசதிகள் வேண்டுமென்றால் கூடவே ஒரு ப்ளாக்பெர்ரி வேண்டுமாம். எந்த அறிவாளி இதை முடிவுசெய்தானென்று தெரியவில்லை. 4ஜி வசதியுடன் வரும் இதன் விலை $500 இருக்குமென்கிறார்கள் (3ஜி 10 இன்ச் ஐபேட் $625 ஆகிறது, 4ஜி உடன்கூடிய சாம்சங் கிட்டத்தட்ட $500 ஆகிறது).

கடகடவென்று இன்னும் சில டாப்ளட்டுகள் பற்றிச் சொல்லிவிட்டுப் பிறகு சுவாரசியமான மேட்டருக்கு வருகிறேன். LG நிறுவனம் ஒரு தேன்கூடு டாப்ளட் கொண்டுவருவதாக வடை சுட்டிருக்கிறது. ஆனால் கண்ணில் எதுவும் காட்டவில்லை. லெனொவோ நிறுவனம் ஒரு டபுள் டெக்கர் கொண்டுவந்திருக்கிறது. அதை அப்படியே வைத்துக்கொண்டால் விண்டோஸ் மடிக்கணினி. திரையை மட்டும் கழற்றிப் பயன்படுத்தினால் ஆண்ட்ராய்ட் டாப்ளட். இது இல்லாமல் விண்டோஸ் 7 கொண்ட சில சிலேட்டுகளும் வந்திருக்கின்றன. அவற்றின் பயன்பாடு புதிராகவே இருக்கிறது. நம் தடிமாடு விரல் கொண்டு ஸ்க்ரால்
எப்படிச் செய்வது, ‘மூடு’ பட்டனை எப்படி க்ளிக்குவது என்று புரியவில்லை. பயன்படுத்திப் பார்த்தால் தெரியுமோ என்னவோ.

மோட்டரோலா ஸூம் ரிம் ப்ளேபுக்
லெனோவோ லேபேட் ஹெச்பி பால்ம்பேட்

எனது சொந்த ஹைலைட்

நோஷன் இன்க் ’ஆடம்’ டாப்ளட். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு புது நிறுவனம். ஐஐடி காரக்பூரிலிருந்து மூன்றே ஆண்டுகளுக்கு முன் தேறிய இளைஞர் ரோஹன் ஷ்ரவனின் கனவு. இரண்டு ஆண்டு கடின உழைப்பிற்குப் பிறகு சென்ற வருட CES-ஐ ஒரு கலக்கு கலக்கிய ஆடம் டாப்ளட்டை அறிமுகப்படுத்தினார் ரோஹன். நான் மேலே லிஸ்டு போட்ட அனைத்தையும் சென்ற ஆண்டே வடிவில் கொண்டுவந்து அனைவரையும் வாய்பிளக்க வைத்த இந்த நிறுவனம், முதலீட்டாளர்களின் பலவந்தத்தாலும் மேலும் சில குழப்பங்களாலும் அவதிப்பட்டுக் காலங்கழிக்க நேர்ந்தது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை முழுமையாக மறுவடிவமைத்து ’ஈடன்’ என்கிற சிறப்பான ஒரு டாப்ளட் இயங்குதளத்தை உருவாக்கி இருக்கின்றனர். சென்ற ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வந்த இந்த டாப்ளட், அவர்களின் அனுபவமின்மை காரணமாகவும், சரியான விற்பனை முறை இல்லாததினாலும் கெட்ட பெயர் வாங்க நேர்ந்தது. பலரும் இவர்களை மோசடிக்காரர்கள் என்று முத்திரை குத்த, ரோஹன் இங்குமங்கும் ஓடி விளக்கங்கள் அளிக்க நேர்ந்தது. எது எப்படியோ, விற்பனைக்குக் கொண்டுவந்த ஸ்டாக் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்றுத்தீர, இப்போது மீண்டும் உற்பத்தி நடந்துகொண்டிருக்கிறது. ரோஹன் CES-க்கு முழுமையாக இயங்கும் ஒரு டாப்ளட்டைக் கொண்டுவந்ததால் பலருக்கும் இப்போது இந்நிறுவனத்தின்மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஆகச்சிறந்த ஹர்ட்வேர், நவீன தொழில்நுட்பத்தாலான தொடுதிரை, டாப்ளட்டுக்குப் பொருந்தும் இயங்குதளம் என்று சாதகமான விஷயங்கள் பல இருக்கின்றன. ஆனாலும் ஒரு சில பிரச்னைகள்: ஐபேட் அளவு மென்பொருட்கள் கிடைக்காது. ஆண்ட்ராய்ட் உலகத்தில் நிறைய மென்பொருட்கள் கிடைத்தாலும் அவை டாப்ளெட்டில் சரியாக இயங்கா. கூகுளாண்டவர் தேன்கூட்டை திறமூலமாக்கும் வரை காத்திருக்கவேண்டும். நாங்கள் நல்லவர்கள், உலகுக்கு நல்லது செய்கிறோம் என்று பஜனை அடித்துக்கொண்டே கூகுளார் மோட்டரோலா, வெரைசான் தோஸ்துக்களுக்கு சொம்படித்துக்கொண்டிருப்பதால் எவ்வளவு சீக்கிரம் இது நடக்குமென்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் மோட்டரோலா முதலில் வெளிவந்து மார்க்கெட் பிடித்தபிறகே மற்றவர்களுக்குத் தேன்கூடும், ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டும் பிச்சை போடப்படும்.

ரோஹன் ஷ்ரவன்

இந்த வருடம் டாப்ளட் நாயகன் யார்?

லிஸ்டு போடுவோம்: சாம்சங் காலக்ஸி, மோட்டரோலா ஸூம், ரிம் ப்ளேபுக், நோஷன் இன்க் ஆடம், லெனோவோ ஐடியாபேட், ஏசர், ஏசஸ், எல்ஜி நிறுவனங்கள் கொண்டுவரும் ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் வகையறாக்கள், இதுவரை வெளிவராத ஹெச்பி பால்ம்பேட் மற்றும் பெரிய ராட்சதன் ஐபேட். மேற்சொன்ன எல்லா நிறுவனங்களும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், அவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனம் ஐபேட் தான். இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் ஐபேட் 2 வரப்போகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு எம்டன். ஜகஜ்ஜால கில்லாடி. முதல் ஐபேடிலில்லாத எல்லாவற்றையும் இதில் கொண்டுவந்து, ராட்சத செயலி பொருத்தி, வேறு ஏதாவது கண்ணைப்பறிக்கும் வண்ணக்கோலத்தைக் காட்டிப் பின்னி எடுத்துவிடுவார் என்று நம்பலாம்.

எனவே எனது இந்திய மனம் ரோஹன் வெல்லவேண்டும் என்று துடித்தாலும், லாஜிக்கல் மூளை ஜெயிக்கப்போவது ஜாப்ஸ்தான் என்கிறது. இரண்டாம் ஐபேட் மன்னனை வரவேற்கத் தயாராகுங்கள்!

பின்குறிப்பு: இந்த நேரத்தில் 2001-ஆம் ஆண்டே டாப்ளட் கணினி என்ற கருத்தை முன்வைத்து, அதற்கடுத்த ஆண்டே அதை விற்பனைக்கும் கொண்டுவந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தொடுதிரை தொழில்நுட்பம் இன்றுள்ள அளவு முன்னேறி இருக்காத அந்தக் காலத்தில் கையில் ஒரு குச்சி வைத்து இயக்கக்கூடிய டாப்ளட்டைக் கொண்டுவந்த மைக்ரோசாஃப்ட்தான் என்னைப் பொறுத்தவரை இத்துறையின் முன்னோடி. சரியான காலகட்டத்தில் வெளிவராத காரணத்தினால் முழுத்தோல்வி அடைந்து, இன்று பத்தோடு பதினொன்றாய் சிங்கி அடித்துக்கொண்டிருக்கும் அவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.

Category: Featured, சுவடுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

3 Comments

  • Nataraj

    The Lenovo double decker is attractive. Per our indian 2in1 mentality, laptop-m aachu, tablet-m aachu..:D

  • admin

    Quite true. I have also planned to check it out :) there are a few more double decker options that I did not mention here. Do check out samsung slider, asus eeepad slider and kno tablet. ellaam double decker thaan :)

  • Ramani

    Microsoft only introduced the form factor called Tablet. But what was ultimately needed for it to succeed is the touch interface. Jobs realized this at the right time. So, I won’t give much credit to MS. Also, iPhone introduced the awesomeness of touch input and set the stage for tablets. It was bound to happen this way.

Leave a Reply

Recommended Articles