இத்தாலியில் பத்து நாட்கள் – 1
வருடத்துக்கு மூன்று வாரங்கள் விடுமுறையென்று பெரியமனது பண்ணியிருக்கிறார்கள் முதலாளிகள். ஒவ்வொரு வருடமும் அதில் இரு வாரங்களாவது பிறந்த மண்ணுக்கு அர்ப்பணமாகிவிடுவதால் மிச்சமிருக்கும் ஒரு வாரத்தை வைத்து உலகப்பிரயாணமெல்லாம் மேற்கொண்டாகவேண்டியிருக்கிறது. சனி, ஞாயிறெல்லாம் பீறாய்ந்தால் பத்து நாட்கள். ஆசியா சொந்தம், அமெரிக்கா பந்தம் என்றாயிற்று. விட்டால் உலகப்பயணத்தின் அடுத்த இலக்கு, ஐரோப்பா!
ஐரோப்பா. பத்து நாட்கள். என்ன செய்வீர்கள்? “மச்சி! நேரா ஆம்ஸ்டர்டாம் போயிரு. இதெல்லாம் ஒரு கேள்வியா!” என்று அறிவுரை பகரக்கூடிய நண்பர்கள் தகையப்பெற்றவனே அடியேன். இருந்தாலும், இது எனது முதல் ஐரோப்பியப் பயணம் (அமெரிக்கா போகிற வழியில் டூட்டி ஃப்ரீ கடைகளை மேய்ந்து ஃப்ளைட் மாறுவதெல்லாம் இதில் சேர்த்தியில்லை). அவ்வகையில் ஆம்ஸ்டர்டாம் போய் ’போற வழிக்குப் புண்ணியம் தேடிக்கொள்ள’ ஆர்வமுமில்லை; கூடவே வரப்போகிற சகதர்மிணியிடம் சாத்து வாங்க சக்தியுமில்லை. பாரிஸ் போயிருக்கலாம் – ஐஃபல் டவர், நாட்ர்டாம், லூவ்ர, நவநாகரிகத் தலைநகரம்…கிடக்கட்டும். லண்டன், சுவிட்சர்லாந்து என்று பல சாத்தியங்களிருந்தாலும் நாங்கள் தெளிவாகவே இருந்தோம்: ஐரோப்பாவில் முதல் காலடி இத்தாலியில்தான்.
அதென்னவோ நம் புத்தி இப்படித்தான் யோசிக்கிறது – ஐரோப்பா என்றால் கிரேக்க, ரோமன் சாம்ராஜ்யங்கள், கலை-இலக்கிய மறுமலர்ச்சி இத்யாதி. ஏதன்ஸில் துவங்குபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கையிலிருந்த பத்து நாட்களை வைத்துக்கொண்டு அதிகம் உணர்ச்சிவசப்படமுடியாதே! அதனால் ரோமராஜ்யத்தின் ஊற்றுக்கண்ணும் மறுமலர்ச்சியின் தொட்டிலுமான இத்தாலியே போவதென்று முடிவாகியது. ஒரு மாதிரி சுலபமாக வாங்கிவிடக்கூடிய ஷெங்கன் விசா குறித்து கொஞ்சம் பின்னிணைப்பாகப் பிறகு எழுதலாம். இப்போது அந்த மொக்கை சமாசாரம் வேண்டாமென்று தோன்றுகிறது. அதனால் நேரே இத்தாலியில் சொய்யாங்கென்று இறங்கிவிடுகிறேன். ஆலிடாலியா விமானத்தின் மகா கொடுமையான இருக்கைகள், கேவலமான டீ.வி. திரை, கண்றாவி சாப்பாடு ஆகியவற்றை விடுமுறைக்குப் போகிற மஜாவில் மன்னித்து விட்டுவிடலாம்.
***
ரோம்!
கிளாடியேட்டர் திரைப்படத்தின் நாயகன் மாக்ஸிமஸ் இவ்வாறு சொல்லுவான்: “நான் உலகில் பல்வேறு இடங்களைப் பார்த்துவிட்டேன். எங்கும் கொடுமை, குருரம், இருள். ரோம்தான் ஒளி”. சீர், செழிப்பு, போர், வெறி, ஆற்றல், அசூயை, துரோகம், துயரம், எழுச்சி, வீழ்ச்சி, ஆணவம், அறிவு, ஆக்கம், அழிவு – ரோமாபுரி பார்க்காததொன்றுமில்லை. பல்லாயிரக்கணக்கான வருட வரலாற்றைச் சுமந்து மௌன சாட்சியாக நிற்கும் ஒரு ‘eternal city’ இது (இந்த அருமையான சொல்லை ‘சாஸ்வத நகரம்’ என்றோ ‘நித்திய நகரம்’ என்றோ மொழிபெயர்க்க மனம் வரவில்லை). ரோமுக்குப் போகாமல் இத்தாலி சென்றுவருவதில் அர்த்தமேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ரோம் மாநகரின் ஃப்யுமிசினோ விமான நிலையத்தில் எங்கள் விமானம் தரையிறங்கியபோது நண்பகல். அமெரிக்காவின் குடியேறல் (immigration) இம்சைகளுக்குப் பழகிப்போயிருந்த நாங்கள் அதிர்ச்சிக்கு ஆளானோம்: ஒவ்வொரு பயணிக்கும் ஒரே ஒரு நொடி. இத்தாலியின் குடியேறல் ஒரு காமெடி பீஸ்.
விமான நிலையம் நகரின் வெளியே மிகத்தள்ளி இருக்கிறது. அங்கிருந்து பஸ்ஸேறினால் நகரைச் சென்றடைய ஒன்றேகால் மணி நேரம். லியோனார்டோ எக்ஸ்பிரஸ் என்ற ரயிலில் போனால் நாற்பது நிமிடங்கள்தான் என்று அறிந்திருந்தோம். டாக்ஸியில் போய் முதல் நாளே எங்கள் சொத்துக்குச் சேதம் விளைவிக்க விரும்பாததால் ரயிலுக்கே சென்றோம் (லியோனார்டோ பெயர் தந்த போதை வேறு!). ரயில் நிலையம் சென்று எங்கள் முதல் இத்தாலி பாடத்தைக் கற்றோம்: கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் வேலை செய்யவேண்டுமென்று அவசியமில்லை.
அடுத்த முயற்சியாக, இத்தாலி குறித்த எங்கள் பொது அறிவைச் சோதிக்க விரும்பினோம். நம் ஊரில் அண்ணாச்சி கடைகள் இருப்பதுபோல் இத்தாலியெங்கும் டப்பாச்சி கடைகள் உண்டு. டப்பாச்சி (tabacchi) என்றால் சிகரெட், புகையிலைக் கடை என்று அர்த்தமாம். கிட்டத்தட்ட நம் ஊர் பெட்டிக்கடைகளில் என்னென்ன சமாசாரங்கள் விற்கப்படுமோ அத்தனையும் இங்கும் உண்டு. அரசாங்கத்தால் லைசென்ஸ் வழங்கப்பட்ட இக்கடைகளில் பஸ், ரயில் டிக்கெட்டுகளும் விற்கப்படும். எனவே அருகிலிருந்த டப்பாச்சியில் போய்க் கேட்டுப் பார்த்ததில் எங்கள் ரயிலுக்கு மட்டும் டிக்கெட்டுகள் தீர்ந்துபோயிருந்தன. வலிய விதியை வைதுகொண்டு எங்களைப்போலவே பலரும் முணங்கிக்கொண்டு நின்ற நீண்ட டிக்கெட் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி ரயிலுக்கு ஓடுவதற்குள் ரயில் ஓடிவிட்டது. அடுத்த ரயில் அரைமணி கழித்து. அதற்குள் பசி வயிற்றைப் பிடுங்க, எதிரில் தென்பட்ட கடையினுள் நுழைந்து, பிட்சா! அடுத்த நான்கு நாட்களுக்கு இதேபோல் பிட்சா மட்டும் உண்டு பிழைக்கவேண்டியிருக்கும் என்று ஆண்டவன் விதித்திருந்ததை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை.
ரயிலில் ஏறுவதற்குமுன் எங்களது பயணச்சீட்டை அங்கிருந்த மஞ்சள் நிற டப்பா ஒன்றில் நுழைத்து உறுதிசெய்துகொண்டோம். இது மிகவும் முக்கியம் என்று இணையத்தில் ஏற்கனவே படித்திருந்தோம். அப்படிச்செய்யாவிட்டால் என்ன ஆகுமென்று அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே தெரிந்துகொள்ளும்படியாயிற்று. எங்கள் எதிரில் அமர்ந்திருந்த இத்தாலியன் ஒருவன் தனது பயணச்சீட்டை உறுதிசெய்துகொள்ளாததால் டிக்கெட் செக்கர் போட்ட அபராதம் ஐம்பது யூரோக்கள்! டிக்கெட் விலை பதினான்கு யூரோக்கள். செக்கர் சென்றபிறகு அந்த இத்தாலியன் உச்சரித்ததெல்லாம் சொல்லத்தகாத கெட்ட வார்த்தைகள் என்று இத்தாலி மொழி புரியாத எங்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது.
ரயில் மெதுமெதுவே ஸ்டேஷனை விட்டு வெளியே வரவும் முதல்முறையாக ரோம் புறநகரின் காட்சிகளைப் பார்க்கப்போகும் ஆர்வமிகுதியில் கண்கள் அலைபாய, வெளியே நோக்கினோம். அது திருவள்ளூர் என்று யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம். ஒரு வித்தியாசமும் இல்லை. சிறுசிறு கடைகள், சுண்ணாம்புச்சுவர்கள், சைக்கிள் டயர், காலி பாட்டில் சிதறல்கள், சுவற்றுக்கிறுக்கல்கள் – ஒன்றையும் மிச்சம் வைக்கவில்லை. ஒரு நிமிடம் ஏமாற்றமாயிருந்தாலும் வெகு விரைவில் சமாதானமாகிப்போனோம். புறநகர்கள் எல்லாம் ஒரேமாதிரிதான் என்ற புரிதலும் சுவாரசியமாகத்தான் இருந்தது. நியூயார்க்கின் ப்ரான்க்ஸ் பக்கத்துப் புறநகர்ப்பகுதிகளும் இவ்வாறேதான் இருக்குமென்பதும் நினைவுக்கு வந்தது. நாற்பது நிமிடங்களும் காட்சிகள் இதேபோல் விரிய, ரயில் நிறுத்தங்கள் வந்துபோன வண்ணமிருந்தன. சிறிது நேரத்தில் ரோமா டெர்மினி எனப்படும் நகரின் மைய ரயில் நிலையத்தை வந்தடைந்தோம். அங்கிருந்து நாங்கள் தங்கப்போகும் ஜாகைக்குச் செல்ல மெட்ரோ ரயில் பிடிக்கவேண்டும்.
ஒரு மாநகரம் என்றால் அதில் ஒரு மெட்ரொ சுரங்க ரயில் இருந்தே ஆகவேண்டும் என்பது என் துணிபு. அதிக மக்கள்தொகை, இடப்பற்றாக்குறை இருக்கக்கூடிய பெருநகரங்களில் பஸ், கார் போக்குவரத்தை நம்பியிருப்பது விரயம். அவ்வகையில் ரோம் மெட்ரோ ரயில் சிறப்பாகவே இருக்கிறது. நான்கைந்து நிமிடங்களுக்கு ஒன்று வந்துவிடுகிறது. நகரின் பகுதிகள் பெரும்பாலானவற்றை அடைந்துவிட முடிகிறது. இரவு ஒன்பது மணிக்குமேல் மெட்ரோ கிடையாதென்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது (நியுயார்க் நகரத்தில் விடிய விடிய சப்வேக்கள் ஓடும்). டெர்மினியில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் சென்று சேர்வதற்குள் பஞ்சராகிப்போனோம். உள்ளுக்குள்ளே வளைந்து நெளிந்து 15-20 நிமிடங்கள் நடந்திருப்போமென்று நினைக்கிறேன். கையில் ஆளுக்கு இரண்டு பொதிகள் வேறு (பொதி சுமப்பது குறித்துப் பிறகு விரிவாகச் சொல்கிறேன்).
ஒரு வழியாக மெட்ரோ ஏறி ரிபப்ளிகா, பார்பெரினி, ஸ்பான்யா என்று சுவாரசியமான பெயர்கள் கொண்ட சுரங்க நிறுத்தங்களைத் தாண்டி, நாங்கள் இறங்கவேண்டிய லெபாந்தோ என்ற நிறுத்தத்தைச் சென்றடையுமுன் ரயில் இரண்டே நிமிடங்களுக்குத் தரைக்குமேல் வெளிவந்தது. இடப்புறம் பாலத்துச்சுவருக்கு அப்பால் தெவெரே (Tiber) ஆறு! இந்த மாபெரும் நாகரிகம் தழைத்தோங்கக் காரணமாக இருந்த ஊற்று. இன்றும் இந்நகரின் தாகம் தீர்த்துக்கொண்டிருக்கும் ஜீவநதி. நொடிப்பொழுதில் உறைத்தது – ரோமாபுரியின் இதயத்தை வந்தடைந்துவிட்டோம்!
(தொடரும்)

6 Comments
அது எப்படி சார் இத்தாலி போற எலாருக்கும் ஒரே மாதிரியான அனுபவம். நான் போன போதும் இப்படிதான், அங்கே போய் டிக்கட் வாங்கலாம்னு போயிட்டு எல்லா ரயிலும் நிரம்பி வழிய, கடைசியில் படிக்கட்டில் பயணம். கொடுமை என்னவென்றால் நாங்கள் அந்த ஐம்பது யுரோ பைனையும் கட்டித்தொலைந்தோம்
ரோமின் அழகான நீரூற்றுகளையும், கொலோசியதையும், வாடிகனின் சிஸ்டைன் சேப்பலையும் தவிர ஒன்றும் பெரிதாக இல்லை என்பதே உண்மை. நம்ம ஊரில் பாழடைந்த கோட்டைகளையும், அரண்மனைகளையும், கோயில்களையும் அப்படியே விட்டு விட, ரோமில் அதனருகில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு இருந்தது என்று ஒரு ஓவியத்தை வைத்து வசூல் செய்வது அதிபுத்திசாலித்தனம். ஆயினும் நீங்கள் சொன்னது போல் ரோமாபுரியின் வரலாறை படித்த பலரும் அதனைப் பார்க்காமல் இருப்பது கடினமே. வெனிஸ் நகரத்தையும் விஜயம் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனக்கு இத்தாலியில் மிகவும் பிடித்த நகரம் அதுவே.
sln, ரோம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்னும் கொஞ்சம் விரிவாகவே எழுதலாமென்றிருக்கிறேன். பார்ப்போம்
வெனிஸும் உண்டே!
Don’t have time to call me.. and you’re writing blog hahh.. grrrr
Itha itha itha than ethir parthen… pala thodarum pottalum paravalle, detaila eluthanum ama solliten….
@Ramani…hehe birdhar, saari
Will talk today for sure
@RJB…ezhudharen ezhudharen
should put out another post by this weekend.
Yaaay! Suber PA – pliss to condinue!!