பெயரில்லாத சிறுகதை – மீள்பதிவு


October 18, 2011 | 2 Comments | 54 views

இச்சிறுகதையை எழுதி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது. இன்று படித்துப் பார்க்கும்பொழுது பல இடங்களில் காமெடியாக இருக்கிறது (எழுத்தல்ல, எழுதப்பட்ட விதம்). அப்போது இதைப் படித்துப் பார்த்த என் நண்பனின் அறைத்தோழன் அவனிடம் சொன்னது: “யார்றா எழுதுனது? சுஜாதாவுக்குப் பக்கத்து வீட்டுப் பையனா!”. வாத்தியாரைப் படித்து வளர்ந்ததில் வாத்தியார் நடையில்தானே எழுத வருகிறது! என்ன செய்ய? இனி கதை.

***

என் கழுத்துச் சங்கிலியை நிமிண்டிக்கொண்டே அவள் அதை ஆரம்பித்தபோதுதான் எனக்குக் கோபம் வந்தது.

“தோ பாருடீ! சும்மா ‘காயமே இது பொய்யடா’ன்னு புல்ஷிட் பேசற ஆள்ட்டல்லாம் என்னால வரமுடியாது!” – கத்திவிட்டேன். கண்ணோரமாய்க் கொஞ்சமாய்க் கண்ணீர் எட்டிப்பார்க்க, திரும்பிப்படுத்தவள்தான், அப்புறம் என் பக்கம் திரும்பவேயில்லை. கொஞ்ச நேரம் அவளது முதுகை வெறித்துவிட்டு பிறகு தூங்கிப்போனேன்.

காலையில் கண்ணாடி முன் நின்று ஷேவிங் செய்யவேண்டியிருக்குமோ என்ற சாத்தியம் தந்த கடுப்பில் தாடையைத் தேய்த்துக்கொண்டிருந்தபோது பாவமாய் வந்து என் பக்கத்தில் நின்றது. ராத்திரி பூரா அழுதிருக்கவேண்டும். ஏற்கனவே குண்டான மூஞ்சி இன்னும் உப்பி வீங்கியிருந்தது.

“என்னடா?” என்றேன்.

“என்கிட்டே பேசாதே!” என்றது.

“ஸாரிம்மா” என்றேன் – அவ்வளவுதான்.

“நான் அப்பிடி என்ன கேட்டுட்டேன்னு நீ என்னைப் பிடிச்சுக் கத்தினே? கல்யாணமாகி நாலு வருஷம் ஆச்சு. ஏய்! ஷேவிங் பண்ற பாவ்லால்லாம் வேண்டாம். என்னைப் பாரு. ம்…எங்க விட்டேன்? ஆ…நாலு வருஷம் ஆச்சு. என்கிட்டயும் மிஸ்டேக் இல்ல, உன்கிட்டயும் மிஸ்டேக் இல்லன்னுட்டு கொம்பு மொளச்ச டாக்டரெல்லாம் சொல்லியாச்சு. உனக்கென்ன தெரியும் என் மனசு படற வேதனை (இந்த வாக்கியம் மட்டும் யாராலயும் மாத்தி சொல்லவே முடியாதா?). ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி’ – இந்த சந்தோஷம் பத்தியெல்லாம் நெனப்பே கிடையாது உனக்கு. உட்கார்ந்து ஜாவால நூல் நூர்க்கச்சொன்னா செஞ்சிகிட்டு இருப்ப.”

“நீ MA தமிழ்னு அப்பப்ப எஸ்டாப்ளிஷ் பண்ணியே ஆகணுமா ப்ரியா?’

“பேச்சை மாத்தாதே. அந்த சக்தி உபாசகர் எவ்ளோ பெரீய்ய ஆள் தெரியுமா! அவர்கிட்ட ஒரு தடவை போனா குழந்தை இல்லாதவங்களுக்கெல்லாம் குழந்தை பொறக்குதுன்னு நம்ம ஹெட்மாஸ்டர் மாமி சொன்னாங்க”

“அடிப்பாவி! அவ்ளோ வில்லங்கமான ஆள்கிட்டயா போகணும்னு சொல்ற? வேணாம்டீ. வம்பு!”

“You perverted brat! வாயைக் கழுவு. இதோ பார். என்கிட்ட வாதம் பண்ணாதே! மரியாதையா உன் கம்ப்யூட்டருக்கு லீவு விட்டுட்டு என்கூட கொடுங்கையூர் வர்றே. நாம அந்த உபாசகரை பாக்கறோம். And that’s that”.

உம்கொட்டிக்கொண்டு கதை கேட்டுக்கொண்டிருக்கும் நேயர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, என் திருவாயை மூடிக்கொண்டு ‘தங்கள் சித்தம் என் பாக்கியம்’ என்று ப்ரியா அன்னை காலாலிட்ட பணியைச் சிரமேற்கொண்டு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட நான் ஷேவிங் தியாகம் செய்து தலைக்குக் குளித்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆவணி அவிட்டத்துக்கு மட்டும் உபயோகப்படுத்தும் என் ஒரே வேஷ்டியைக் கட்டிக்கொண்டு ப்ரியாவுடன் கிளம்பியாயிற்று கொடுங்கையூருக்கு.

மத்திய தட்டு ரசனையில் ஒரே மாதிரி கட்டப்பட்டிருந்த வீடுகள் கொண்டிருந்த தெருக்களில் புகுந்து, குண்டுகுழிகளைத் தவிர்த்து, வேகத்தடைகளில் எகிறி, அந்த உபாசகர் வீட்டைக் கண்டுபிடிப்பதே கொஞ்சம் கஷ்டமாய்த்தான் இருந்தது. வாசலில்

“சக்தி. செல்வராஜ்
M.Sc. M.Phil
சக்தி உபாசகர்”

சந்தன குங்குமத் தெளிப்புகளுக்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தது. இது என்னாடா கொடுமை! இவ்ளோ படித்துவிட்டு இந்த ஆள் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறான்?

புதிய வீடுதான். வாசற்படிக்கு முன் ஒடியிருந்த ஸ்டிக்கர் கோலம். நிறைய செருப்புகள். ஒருக்களித்து சாத்தியிருந்த கதவுக்குப் பின்னாலிருந்து ஒரு வாண்டு எட்டிப் பார்க்க, நாதஸ்வரம் போல ஏதோ ஒன்று வழிந்து வெளியே வந்து காதை நனைத்தது. ஆன்மீகம் திணிக்கப் பட்டு வீடு கொஞ்சம் அவஸ்தைப்படும் தோற்றத்தில் இருந்தது. ப்ரியா பின்னாலிருந்து காதைக் கடித்தாள். “உள்ள போயேன். ஏன் வாசல்லயே நின்னு பராக்கு பாக்கறே?”. யாரும் அழைக்காமல் உள்ளே போய் நான்கைந்து தலைகளைத் தாண்டி ஒரு முக்கில் உட்கார்ந்தபின் சுற்றி ஒரு நோட்டம் விட்டேன்.

இருபதடிக்குப் பனிரெண்டடி முன்னறையில் மொத்தம் பத்துப் பதினைந்து பேர் இருந்திருப்பார்கள். கூடவே ஒரு சின்ன டைனிங் டேபிள், ·ப்ரிட்ஜ். சிலர் பொழுதுபோகாமல் தலை சொறிந்துகொண்டும், மூக்கு நோண்டிக்கொண்டும், தலைகுனிந்து கையைப் பார்த்துக்கொண்டும் சேஷ்டைகள் செய்துகொண்டிருந்தாலும், நான் உட்பட நிறைய பேருக்கு எதிரேயிருந்த அறையின் மேல்தான் கவனம் சென்றது.

அதனுள்ளே இருப்பவர்களை மற்றும் இருப்பவற்றை ஒரு திரைச்சீலை மறைத்துக் கொண்டிருந்தது. அது காற்றில் அசைந்தபோது உள்ளேயும் சில தலைகள் தெரிய, என் ஆர்வம் இன்னும் அதிகமானது. அவர்கள் என்ன சிறப்பு தரிசனமா என்று சந்தேகம் எழும்ப, பக்கத்திலிருந்த பெரியவரிடம் கேட்டேன். அவர் சிரிப்பதுபோல ஏதோ பண்ணிவிட்டு “அங்கதான் ஷாமியாழு இழுக்காழு சாழ்” என்றுவிட்டு வாயிடுக்கில் வழிந்த புகையிலை எச்சிலைத் துடைத்துக்கொண்டார். “ஷாமி கூ·ப்ட்ட பொறவு நாமளும் உள்ளாற போகணும்” என்றுவிட்டு எச்சில் துப்ப எழுந்து போனார். வெளியே போய்த் துப்ப இன்னும் என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. நான் ப்ரியாவிடம் கேட்டேன் “அப்பன்னா நாம போய் எதாவது பதிவு கிதிவு பண்ணிக்கணுமா, இல்ல கியூ சிஸ்டமா?”. அதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அவள் சிரித்துக்கொண்டுதான் சொன்னாள் “இதென்ன டாக்டர் க்ளினிக்னு நெனச்சியா! சக்தி உபாசகர்! அவரே ஒரு அசிஸ்டெண்டை விட்டனுப்பி நம்ம பேரோ அடையாளமோ கரெக்டா சொல்லிக் கூப்புடுவாராம். ஞான திருஷ்டியெல்லாம் உண்மைன்னு இப்ப நீயே புரிஞ்சிப்பே”.

எனக்கு “தோடா” சொல்லத் தோன்றியது. திரைச்சீலை விலகி ஒரு ஆள் அந்த அறையிலிருந்து பிரசன்னமானான்; “இங்க லட்சுமிங்கறது யாருங்க?” என்றான். இரண்டு மூன்று பெண்கள் கன்னத்தில் போட்டுக்கொண்டு எழுந்தார்கள். “·ப்ரிஜ்ஜுக்குப் பக்கத்துல இருக்கற லட்சுமி மட்டும் வாங்கம்மா! சாமி அப்பிடி சொல்லித்தான் கூப்ட்டாரு” என்றான். “நாந்தாங்க, சுப்புலட்சுமி” என்று அந்த அம்மாள் தன் கையிலிருந்த மஞ்சள் பையை என் தலையில் இடித்துக்கொண்டு உள்ளே போனாள். பைக்குள் இருந்த தேங்காய் ஏழெட்டு ரூபாய் இருக்கும் என்று அந்தத் தாக்குதல் என் மண்டைக்குப் பிரகடனம் செய்தது.

ப்ரியா புல்லரித்துப்போய் உட்கார்ந்திருந்தாள். “எவ்ளோ சக்தி பாத்தியா!” என்றாள். நான் தலையிலடித்துக்கொண்டேன். “உனக்குக் காமன் சென்ஸ் மருந்துக்குக் கூட கெடையாதா ப்ரியா! நம்ம தமிழ்நாட்டுல எவ்ளோ லட்சுமி தெரியுமா! theoritical-ஆ 8 லட்சுமி. நிஜ வாழ்க்கையில எக்கச்சக்க லட்சுமி. நான்கூட ஒரு இருவது தாய்க்குலம் இருக்கற எடத்துல போய் மொட்டையா லட்சுமீன்னு கூப்பிட்டா ஒரு நாலு லட்சுமி திரும்பிப் பாக்கும். இந்த ஆள் வேலைக்காக மாட்டான். சும்மா பஜனை! டைம் வேஸ்ட்” என்றேன்.

ப்ரியாவுக்கு அந்தப்பக்கத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. “சார்! அப்படியெல்லாம் சந்தேகப்படாதீங்க! இவரு நெஜமான மகான். தீர்க்கதரிசி. நீங்க ஒரு தடவை உள்ள போயி உக்காந்து பாருங்க. உங்களுக்கே தெரியும். ஒரு மாதிரி உடம்பெல்லாம் பரபரன்னு இருக்கும். என்னன்னே சொல்ல முடியாது. எதோ ஒரு பெரிய சக்தி நம்மள சுத்தி இருக்கறமாதிரி. சில சமயம் நாம நம்மளையே மறந்துபோய்டுவோம். அவருகிட்ட எதோ இருக்கு சார்!”.

எனக்கு அவரைப் பார்த்தால் பாவமாய் இருந்தது. பார்க்க கொஞ்சம் பெரிய மனிதர் தோரணை இருந்தது. நான் சொன்னேன் “மன்னிக்கணும். உங்க வலது மூளையோட சேட்டைகளை எல்லாம் இவரோட சக்தின்னு சொல்றீங்க. இந்தாளுக்கும் உங்க உணர்ச்சிகளுக்கும் சம்பந்தமே இல்லை”.

அவர் காயப்பட்டது போல் முறைத்தார். “ப்ச்” என்றார். பிறகு திரும்பி உட்கார்ந்தார். ப்ரியாவுக்குக் கோபமே வந்துவிட்டது. என் காதில் கிசுகிசுத்தாள் “ஏய்! உனக்கு ரொம்ப கொழுப்பு ஏறிப்போச்சு! உனக்கு நம்பிக்கை இல்லைன்னா சும்மாயிரு. என் கிட்ட உளர்றாமாதிரி எல்லார் கிட்டயும் உளறாதே”

“இல்ல ப்ரியா! நான்…”

“சரி! நீ இவ்ளோ பேசறியே, என் பேர் ப்ரியா! தெரிஞ்ச பேர்தான்னாலும் லட்சுமி மாதிரி கெடையாதில்லையா! என்னை எப்டி கூப்டுவாரு சொல்லு?”

“அய்யே! இது ரொம்ப சுலபம்! அந்த ஆள் வருவான், வந்து, கையில ப்ரவுன் ஹேண்ட் பேக் வெச்சுகிட்டு கப்போர்ட் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு இருக்கிறவங்களையும் அவங்க பக்கத்துல பச்சை சட்டை, வேஷ்டி கட்டிகிட்டு இருக்கிறவரையும் சாமி கூப்ட்டாருன்னு சொல்வான்! சிம்பிள்!”. சொல்லி வாயை மூடவில்லை. அந்த ஆள் அறையிலிருந்து வெளியே வந்தான். கூடவே இரண்டு பேர், புருஷன் பெண்டாட்டியாய்த் தானிருக்கவேண்டும். அந்தப் பெண் முகத்தில் புளகாங்கிதத்தோடும் கையில் கொஞ்சம் பூவோடும் “இனிமே கவலை இல்லை! சாமிகிட்ட சொல்லியாச்சு. அவர் பாத்துப்பார்” என்று சொல்லிக்கொண்டே செருப்புமாட்டிக் கிளம்பினாள். சாமியாரின் வேலையாள் “இங்க யாரும்மா ப்ரவுன் ஹேண்ட் பேக் வெச்சிருக்கீங்க?” என்று கேட்க, நான் ப்ரியாவை ஏறிட்டேன். ப்ரியா “நாந்தான்” என்று எழுந்தாள். நாங்களிருவரும் உள்ளே போனோம்.

சின்ன அறைதான். ஒரு சுவற்றில் நிறைய அம்மன் படங்கள். பெரிய வெண்கலக் குத்துவிளக்கு. அறை முழுக்க லேவண்டர் ஊதுபத்தி மணம் கமழ, சக்தி உபாசகர் படங்களின் முன்னால் உட்கார்ந்திருந்தார். நல்ல தெளிவான முகம். தங்க ·ப்ரேம் கண்ணாடியுள் தீட்சண்யமான கண்கள். முழுக்காவி, பற்கள் உட்பட. சற்று அடர்ந்த தாடி. பரந்த மார்பின்மேல் போர்த்திய காவித்துண்டு. ப்ரியாதான் கும்பிட்டாள். நான் சும்மா இருந்தேன். இருவரையும் உட்கார் என்பதுபோல் சைகை செய்தார். என்னை உற்றுப்பார்த்தார்.

பிறகு அவருக்கு எதிரில் உட்கார்ந்திருந்த வழுகை ஆசாமியை ஏறிட்டு “சொல்லுங்க” என்றார். “என்னத்த சாமி சொல்றது? எம்புள்ள சும்மா செக்கச் செவேர்னு சேட்டுப் புள்ள மாதிரி இருப்பான். திடீர்னு இந்தத் தோல் வியாதி வந்து, உடம்பு கலரே போச்சு. பள்ளிக்குடம் போகவே வெக்கப்படுறான். பாக்காத டாக்டரில்ல. செய்யாத வைத்தியமில்ல. ஒண்ணும் பிரயோசனமில்ல. நீங்கதான்…” என்றுவிட்டு, தன் பையனை நோக்கி “டேய்! சாமியக் கும்புட்டுக்கடா” என்று அதட்டினார் வழுக்கை.

“இருக்கட்டும். ம். இந்த விபூதிப் பிரசாதம், குங்குமப் பிரசாதம் வெச்சிக்குங்க. எல்லாம் அவ பாத்துக்குவா. கவலப்படாம போங்க. அருகம்புல் அரைச்சு உடம்புல தேச்சிக் குளிக்க சொல்லுங்க. அருகம்புல் சாறு கொடுங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று நம் சாமி சொல்ல, எனக்கு சிரிப்புதான் வந்தது. இந்தாள் சாமியாரா, நாட்டு வைத்தியனா?”.

திடீரென்று சாமியார் என்னை முறைத்தார். “இப்ப நீங்க என்ன நெனச்சீங்க?” என்று கேட்க, நான் ஆடித்தான் போய்விட்டேன். கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு “ஒண்ணும் நெனைக்கலியே” என்றேன். அவர் ப்ரியாவைப் பார்த்து “ஏம்மா நம்பிக்கையில்லாதவங்களையெல்லாம் கூட்டிட்டு வர்றீங்க?” என்றார். ப்ரியா முகமே மாறிவிட்டது. “அது வந்து…” என்று இழுக்க, “இவருதான் நாத்திகம் பேசறாரு இல்ல? இவரோட atheist எண்ண அலைகள் மத்தவங்களையும் கலைக்குதில்ல?”. எனக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

“நான் atheist கிடையாது, Agnostic”

“இது வேறயா! கடவுள் நம்பிக்கை இல்லைன்னாவது திடமா இருக்கணும். அது என்ன சார், agnostic? கடவுள் இருக்காரா இல்லயான்னு தெரியாது, சொல்ல முடியாதுன்னுட்டு; ஒம்போதுத்தனமா. வெளிய பாத்தா சாமி, பூதம் கெடையாது, தெரியாதும்பீங்க. ராத்திரியில வாசல்ல வெள்ளையா ஆடினா, “காக்க காக்க”ன்னு கந்தசஷ்டி கவசம் சொல்வீங்க. எல்லாம் பாசாங்கு”

“பாசாங்கைப் பத்தி நீங்க பேசறீங்களா சாமியாரே! நீங்கல்லாம் பண்றது என்னவாம்?”

“இந்தக் காலத்துப் பசங்களே இப்பிடிதான் இருக்கீங்க. ஏதோ ஒண்ணு ரெண்டு சாமியார் தப்பு பண்ணி மாட்டினாங்கறதுக்காக ஒட்டுமொத்தமா பொதுவா சந்தேகப் படறீங்க. மேம்போக்கா சிந்திக்கிறீங்க”

“நீங்கதான் இப்போ பொதுவா சொல்றீங்க. Agnostism பத்தின உங்க விளக்கமே தப்பு. என்னோட அபிப்பிராயங்களைக் குறை சொல்ற உரிமை உங்களுக்குக் கெடையாது”

“எங்களோட நம்பிக்கைகளைக் குறை சொல்ற உரிமை உங்களுக்கு மட்டும் இருக்கா? இவ்ளோ பேசறீங்களே, உங்க அறிவியல வெச்சிகிட்டு படைப்பை விளக்குங்க பாப்போம்?”

“ஒத்துக்கறேன். அதுமட்டும் இப்போதைக்குத்தான் முடியலை. ஆனா மீதியெல்லாம் விளக்க முடியுதே. அங்க எல்லாம் கடவுள் தேவையில்லையே! அப்ப உங்க கடவுள் உலகத்தைப் படைச்சிட்டு, நாசமாப் போகட்டும்னு விட்டுட்டு இண்டியா-பாகிஸ்தான் கிரிக்கெட் பாக்கப் போயிட்டாரா?”

“நீங்க பண்றது விதண்டாவாதம்”

“அப்ப கடவுளைக் காமிங்க! show him! make us feel him!”

“அது உங்க கண்களால முடியாது”

“இதோ பாருங்க! இந்த ஞானக்கண், பூனைக்கண் பஜனையெல்லாம் வேண்டாம்! கடவுள் இருக்காருன்னு எனக்குத் தெரிய வெக்கணும்! செய்ய முடியுமா?”

எல்லாரும் என்னை பயந்தமாதிரி பார்த்தார்கள். நான் கன்னாபின்னாவென்று கத்தியிருக்க வேண்டும். என் கையெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. சாமியார் மவுனமாக இருந்தார். கண்களை மூடிக்கொண்டு யோசிக்கிறமாதிரி பட்டது. நான் வென்றுவிட்டாற்போல ஒரு பிரமை.

சட்டென்று அவர் சொன்னார், “சரி, நீங்க இவ்ளோ பேசினதுக்கப்புறம் சொல்றேன். அடுத்த வாரம் திங்கட்கிழமை நீங்க போற வழியில உங்களுக்கு ஒரு விபத்து நடக்கும். அதிலிருந்து நீங்க தெய்வாதீனமா தப்பிச்சிடுவீங்க. அப்புறம் கடவுளை நம்புவீங்க”.

எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. “என்னய்யா! சாபம் விடறியா! பாக்கலாமா! விபத்தும் நடக்காது ஒரு மசிரும் நடக்காது, ஏய் ப்ரியா! இந்தாள் ஹம்பக். சும்மா ஓலடிக்கிறான். வா போலாம்” என்று அலறினேன். ப்ரியா மிரண்டு போய் என்னைப் பார்த்தாள். “இப்போ வரப்போறியா இல்லியா” என்று நான் கத்த, விலுக்கென்று எழுந்து வந்துவிட்டாள்.

ரெண்டு நாளாக ப்ரியா என்னிடம் சரியாகவே பேசவில்லை. எனக்கு மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருந்தது. அவளுக்கு எல்லாமே நான்தான். என்னதான் சண்டை போட்டாலும் சட்டென்று சமாதானமாகிவிடும். இப்படிப் பேசாமலெல்லாம் இருந்ததேயில்லை. ஞாயிற்றுக்கிழமையாதலால் நான் தொலைக்காட்சி முன்னாலேயே தவங்கிடந்தேன். ப்ரியாவைக் கவனிக்கவேயில்லை. பாவம், என்ன பண்ணுகிறாளோ?
எழுந்து போய் என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். படுக்கையறையில் குப்புறப் படுத்திருந்தாள். கிட்டே போனதும் விசும்பல் கேட்டது. “ப்ரியா! டேய்…” என்றதும் எழுந்து என்னைக் கட்டிக்கொண்டாள். விசித்து விசித்து அழுதாள். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. “கமான்! என்னாச்சு உனக்கு?” என்று கேட்டேன். “நாளைக்கு திங்கள்” என்றாள்.

“ஸோ?”

“என்ன ஸோ! உனக்கு எல்லாம் விளையாட்டு! அவரு சொன்னாருல்ல, உனக்கு…” திக்கித் திக்கிப் பேசினாள்.

“அட மக்கு! இதுதானா அழுகை! அவன் கெடக்கறான் ·ப்ராடு பையன். உன் ஹீரோக்கு ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதே” என்றேன்.

காலையில் நான் காலுறை போடும்போது எதிரில் ப்ரியா வந்து நிற்கிறது. கையில் ஒரு பொட்டலம். “இது கபாலி கோவில் பிரசாதம். நீ இன்னிக்கு அவசியம் போகணுமாடா! வீட்லயே இரேன்” என்றாள். “போடி! உனக்கு வேற வேலை இல்லை. அவன்தான் ஏதோ பேத்தினான்னா நீயும் அதையே புடிச்சிகிட்டு இருக்கே? வேணும்னா எனக்கு வீரத்திலகம் இட்டு வழியனுப்பு” என்று விபூதி இட்டுக்கொண்டு காரைக் கிளப்பினேன்.

கச்சேரி சாலையிலிருந்து இடப்புறம் திரும்பி ராமகிருஷ்ணா மடம் சாலையில் நுழையும்போது கவனித்தேன். ஏதோ சரியாக இல்லை. கார் சரியில்லையா இல்லை நான் சரியில்லையா என்று தெரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் அந்த சாமியாரின் முகம் நினைவில் வந்தது. அந்த ஆள் எப்படி அவனைப் பற்றித்தான் நான் நினைத்தேன் என்று கண்டுபிடித்தான்??

ப்ரேக் சரியாகப் பிடிக்காததுபோல் ஒரு பிரமை. என்ன ஆச்சு எனக்கு? இடப்புற இண்டிகேட்டருக்கு பதில் வலப்புற இண்டிகேட்டர் போட்டு. கடைசியில் ஏதோ தோன்றி மாற்றினேன். எதோ தப்பு. என் கை ஏன் நடுங்குகிறது? முட்டாள் பயலே! தெளிவாயிரு!

அப்போதுதான் அது நடந்தது. மந்தைவெளி நிறுத்தம் தாண்டி நேராக வந்துகொண்டிருந்தபோது, தேவநாதன் தெருவிலிருந்து தவறான பாதையில் ஒரு மொபெட் வந்தது. ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. ப்ரேக் அழுத்தப் போய், தவறுதலாக வேகத்தை அதிகப்படுத்தி, சுதாரிப்பதற்குள், மொபெட் பறந்துபோய் விழ…ஆ…

நினைவுதிரும்பும் படலத்தை நிறைய கதைகளிலும் சினிமாக்களிலும் நீங்கள் பார்த்திருப்பதால் அதை நீங்களே இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்.

ப்ரியா பழச்சாறு தயாரித்துக்கொண்டிருக்க, நான் சொன்னேன் “சே! அந்த உபாசகரை நான் தப்பா நெனச்சிட்டேன்! அவரு தீர்க்கதரிசி! தெய்வம்!”

ப்ரியா சொன்னாள், “நாசமாப் போச்சு! தெய்வம்னு சொல்லிட்டு, கிட்டத்தட்ட அவரை தெய்வமாவே ஆக்கிட்ட நீ! சண்டாளப்பாவி! பாவம் அந்த மனுசன். இன்னும் இன்டென்ஸிவ் கேர்லதான் இருக்காரு!”.

Category: சுவடுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

2 Comments

Leave a Reply

Recommended Articles